பிரம்ம தேவனும், வேதங்களும் வந்து வழிபட்டதால் இத்தலம் 'வேதிக்குடி' என்று பெயர் பெற்றது. பிரம்மனுக்கு 'வேதி' என்ற பெயரும் உண்டு. திருவையாறு சப்தஸ்தானத் தலங்களுள் மூன்றாவது தலம். திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகியவை மற்ற தலங்கள். சித்ரா பௌர்ணமி அன்று சப்தஸ்தானத் திருவிழா என்று வழங்கப்படும் ஏழூர் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
மூலவர் 'வேதபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சற்று பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'மங்கையர்க்கரசி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். அம்பாள் சன்னதி கோயிலுக்கு வெளியே உள்ளது. அம்பிகை சன்னதிக்கு அடுத்தே கோயில் கோபுரம் உள்ளது.
மூலவரின் பின்புறம் கோஷ்டத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் இடம்மாறி வலப்புறம் அம்பிகையும், இடப்புறம் ஈசனுமாக காட்சி தருகின்ற சிற்பம் மிகவும் அழகாக உள்ளது.
'கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்' என்று சம்பந்தர் இத்தலத்தில் பாடியுள்ளார். அதனால் திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்துக் கொண்டால் தடை நீங்கும்.
பங்குனி மாதம் 13 முதல் 15ம் தேதி வரை சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழுகிறது.
அருணகிரிநாதர் தமது திருப்புகழில் 'ஏழு திருப்பதி' என்று பாடியுள்ளதால் இத்தலமும் திருப்புகழ் தலமாகும். சப்தஸ்தானத் தலங்களுள் திருவையாறு, திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய தலங்களுக்கு மட்டும் தனித் திருப்புகழ் உள்ளது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|